
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை (டாஸ்மாக் எண் 2875) அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்தையூர் எக்ஸ்-ரோட்டில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த மதுபானக் கடை காரணமாக அப்பகுதியில் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் தினந்தோறும் இந்த வழியாக பள்ளிக்கு சென்று வரும் நிலையில், மதுபானக் கடைக்கு வரும் நபர்களால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், கடையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மதுபோதையில் சிலர் சாலையோரங்களில் தகராறில் ஈடுபடுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.இந்நிலையில், மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுபானக் கடை முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பியதுடன், கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது பொதுமக்கள், “பள்ளி மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சந்தையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்களின் நலன், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக அமைதியை கருத்தில் கொண்டு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதனால் சந்தையூர் எக்ஸ்-ரோடு பகுதி தற்போது மாவட்ட அளவில் கவனம் ஈர்த்துள்ள பகுதியாக மாறியுள்ளது.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி


