
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலக்கோடு இந்தியன் வங்கி முன்பாக வங்கிப் பணிகளுக்காக வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையோரங்களில் ஒழுங்கற்ற முறையில் நிறுத்திவிட்டு செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் சரக்கு லாரிகள், கார்கள், டெம்போ வாகனங்கள் மற்றும் பிற வணிக வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியன் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் தங்களது இருசக்கர வாகனங்களை வங்கியின் முன்பகுதியிலும், நெடுஞ்சாலையின் ஓரங்களிலும் நிறுத்திவிட்டு செல்வதால் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பெரிய வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுவதோடு, உச்சநேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களிலும், அலுவலக நேரங்களிலும் இந்த பகுதியில் கடும் நெரிசல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பேருந்துகளில் பயணம் செய்பவர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்கள் கூட நெரிசலில் சிக்கிக் கொள்வதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், “இந்தியன் வங்கி முன்பு தினமும் இதே நிலை தொடர்கிறது. வங்கிக்கு வரும் நபர்கள் சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இதனால் பேருந்துகள் திரும்புவதற்கும், பெரிய வாகனங்கள் செல்லுவதற்கும் இடையூறு ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றனர்.மேலும், இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பணியில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விதிமுறைகளை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இந்த பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “நெடுஞ்சாலையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுப்பதற்காக தடுப்புக்கம்பிகள் அமைக்க வேண்டும். வங்கிக்கு தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து விதிமுறைகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்து அபாயமும் அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாலக்கோடு நகரின் முக்கிய நெடுஞ்சாலையில் நிலவும் இந்த போக்குவரத்து சிக்கலுக்கு விரைந்து தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
பாலக்கோடு செய்தியாளர்
சமூக சேவகர் சரவணன்
