Wed. Jun 17th, 2026

செய்யாறு, ஜூன் 14 –

‘எந்த ஒரு நிலத்தையும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’ என செய்யாறு சிப்காட் விரிவாக்க பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘மேல்மா கிராமத்து’ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தபோது, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேசமாக பேசினார்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அடுத்துள்ளது மாங்கால் கூட்டுரோடு. இங்கு கடந்த 2006ம் ஆண்டு 2,400 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது.‌ இங்கு தற்பொழுது 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிற்பூங்காவின் விரிவாக்கத்திற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையான மேல்மா மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 2000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவதாக நான்கு ஆண்டுகளாக அதிகாரிகள் – விவசாயிகளிடம் மல்லுக்கட்டி வருகின்றனர். நில உரிமையாளர்களின் எதிர்ப்பை மீறி, இந்த விவசாய நிலங்களையும், அதிகாரிகள் தேர்வு செய்து அளந்தெடுத்து விட்டனர். சில விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் இழப்பீட்டுத் தொகையையும் அரசு செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

எங்களது நிலத்தை தொழிற்பூங்காவுக்கு கொடுக்க மாட்டோம் என, விவசாயிகள் பிடிவாதமாக இருந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட கலெக்டர் வந்தனா கார்க், நில எடுப்பு அதிகாரிகள், செய்யாறு, வெம்பாக்கம் தாசில்தார்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மேல்மா மற்றும் சுற்றியுள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் கலந்தாலோசித்தனர். அப்பொழுது மேற்கண்ட கோரிக்கைகளை விவசாயிகள் அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் முன் வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை முழுமையாக கேட்ட பின்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயிகளிடம் கூறியதாவது; ‘தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக முக்கியமானது என்று கருதப்பட்டாலும், தமிழக முதல்வர் விஜய் விவசாயிகள் பக்கம் தான் இருப்பார். ‘எந்த ஒரு நிலமும் அடக்கு முறையில் பிடுங்க கூடாது’. சிப்காட் தொழில் பூங்காவிற்காக நிலம் கையகப்படுத்துவது குறித்து ‘உண்மை – தன்மை’ அறியும் வகையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படும். தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர், அதிகாரிகளை நம்புங்கள்.

நானும் மாதம் ஒரு முறை உங்களை வந்து சந்திப்பேன் உங்களது விவசாய நிலங்களை சிப்காட் விரிவாக்கத்திற்கு தாராவார்க்க விடமாட்டேன். உங்களது கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் பேசி உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொடுக்கிறேன். திருவண்ணா மலையின் கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் எளிமையான இவரும் அருள் ஆறுமுகமும் உங்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்; ‘இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விவசாயிகளிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட த.வெ.க.,வின் ஒன்றிய செயலாளர்களான தினேஷ்குமார், சேதுபதி, சிவ விநாயகம், குமரேசன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என, பலரும் கலந்து கொண்டனர்.

இணை ஆசிரியர்

வாசுதேவன்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed