
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வநத பெண்களை ஒரு கும்பல் இவர்களை வழிமறித்து காட்டுக்குள் இழுத்து சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து அத்துமீறலில் ஈடுபட்டது.இதேபோல் இன்னொரு பெண்ணிடம் ஒரு கும்பல் ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து அத்துமீறியது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்துள்ளார். அதனை முடித்துவிட்டு கடந்த 30-ந் தேதி இரவு இருசக்கர மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பெரியகோளாப்பாடி அருகே அவர் தன் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்துள்ளனர்.அப்போது, ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் இருவரையும் மிரட்டி காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அங்கு அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பல், அவரது 2 பவுன் சங்கிலியைப் பறித்தது. மேலும் இருவரையும் நிர்வாணமாக்கி செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மறுநாள், பெண்ணின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் தராவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, ‘ஜி-பே’ மூலம் ரூ.4,000 பறித்தனர்.பின்னர் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் தர்மபுரியில் இருந்து 100 என்ற போலீஸ் எண்ணில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மேற்கு போலீசார் தர்மபுரியில் உள்ள பெண்ணை உடனடியாக திருவண்ணாமலைக்கு வரவழைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி இரவு திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த பியூட்டி பார்லரில் வேலை செய்யும் 23 வயது இளம்பெண் வேலையை முடித்துவிட்டு அன்று இரவு கிரிவலம் சென்றுள்ளார். அடிஅண்ணாமலை கிராமம் அருகே சென்றபோது அவருக்கு கால் வலி ஏற்பட்டதால் ஆண் நண்பருக்கு போன் செய்து தன்னை அழைத்து சென்று வீட்டில் விடும்படி கேட்டு உள்ளார்.அதன்பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த நண்பர் அந்த இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஓட்டலில் டிபன் வாங்கிவிட்டு அய்யம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று உணவு அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவர்கள் இருவரையும் அங்கிருந்த ஒரு காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்று இருவரையும் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் இளம்பெண் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை பிடுங்கிக் கொண்டு நாளை ஜி.பே. மூலம் பணம் அனுப்ப வேண்டும் என மிரட்டி அனுப்பி உள்ளனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் அன்று இரவு வீட்டுக்குச் சென்று தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுது உள்ளார். அதன்பேரில் 1-ந் தேதி திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பௌர்ணமி கிரிவலத்தையொட்டி அடுத்தடுத்து வந்த இந்த புகார்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்தனர். தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இந்த சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.இதையடுத்து தனிப்படை போலீசார் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன், பெரியபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், அஸ்வநாதகரணை கிராமத்தைச் சேர்ந்த அப்பு, அரிகரன், சர்மா, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், திருவண்ணாமலை பாலாஜி நகரைச் சேர்ந்த சிவகணேசன் மற்றும் 16 வயதுடைய சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்…
ஆசிரியர் D. ராஜீவ் காந்தி
திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர்.
ஜேசுதாஸ்
