Sat. Jun 13th, 2026

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலை ஊராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராமப்புற இணைப்பு சாலைகளில் பல தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் தெருக்கள் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததால் விஷப்பாம்புகள் மற்றும் தெருநாய்கள் அச்சுறுத்தலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சில இடங்களில் தற்காலிகமாக பழுது பார்த்தாலும், மீண்டும் குறுகிய காலத்திலேயே விளக்குகள் செயலிழக்கின்றன என்றும் கூறப்படுகிறது.குறிப்பாக, தீர்த்தமலை பகுதி சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருப்பதால், வெளிநாடுகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் இரவு நேரங்களில் சிரமத்தை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எனவே, தீர்த்தமலை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து தெரு விளக்குகளையும் ஆய்வு செய்து, பழுதடைந்த விளக்குகளை மாற்றி சீரமைக்கும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில், தெரு விளக்குகள் பராமரிப்பிற்கான நிரந்தர கண்காணிப்பு முறை அமல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைமை செய்தியாளர்.

பசுபதி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *