
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அரசு பாறை புறம்போக்கு நிலம் தொடர்பாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி வாங்கியுள்ளதாக கூறப்படும் நிலத்திற்கு அருகில் உள்ள அரசு பாறை புறம்போக்கு நிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக கம்பரசர் இயந்திரம் பயன்படுத்தி வெடி வைத்து பாறைகள் அகற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.இந்த நடவடிக்கைக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வாய்வழி அனுமதி வழங்கி ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதற்காக பணம் பெற்றுக் கொண்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தற்போதைய பாலக்கோடு வட்டாட்சியர் ரஜினி, முன்னாள் பாலக்கோடு வட்டாட்சியர் மற்றும் தற்போது பென்னாகரம் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆக பணியாற்றி வரும் ஆறுமுகம் ஆகியோரின் ஆதரவுடன் இந்த நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், சம்பந்தப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் சட்டவிரோதமாக பாறைகள் அகற்றப்படுவது குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தருமபுரி கோட்டாட்சியர் தரப்பில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என பதிலளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மத்தியில் மேலும் சந்தேகமும் அதிருப்தியும் அதிகரித்துள்ளது.அரசு புறம்போக்கு நிலங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அலட்சியமாக செயல்படுகின்றார்களா? சட்டவிரோத வெடி வெடிப்பு நடவடிக்கைகளுக்கு யார் ஆதரவு வழங்குகின்றனர்? என்பன போன்ற கேள்விகள் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, தவறு செய்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு செய்தியாளர்
சமூக சேவகர் சரவணன்
