

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 19:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய போராட்ட அழைப்பின் பேரில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், விவசாய உரங்களின் விலையை குறைக்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், தொழிலாளர் உரிமைகளை பாதிக்கும் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை (19.06.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தனுஷன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் மல்லிகா கலந்து கொண்டு கண்டன சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், விவசாய உற்பத்திக்குத் தேவையான உரங்களின் விலை உயர்வு விவசாயிகளை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊரக மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்காமல் அதன் செயல்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க வட்ட செயலாளர் வஞ்சி, வட்டத் தலைவர் விவேகானந்தன், தென்னை விவசாய சங்க மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, மூத்த தோழர்கள் கணேசன், சேகர், சொக்கலிங்கம், வட்டக்குழு உறுப்பினர்கள் மனோகரன், அம்புரோஸ், கண்ணகி, கிருஷ்ணவேணி, குப்பன், விஜியா, சக்திவேல், சரவணன், மாதையன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்கள் டார்வின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, “எரிபொருள் விலை உயர்வை திரும்பப் பெறு”, “சமையல் எரிவாயு விலையை குறை”, “விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரம் வழங்கு”, “100 நாள் வேலைத் திட்டத்தை பாதுகாத்திடு”, “தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறு”, “மக்கள் விரோத கொள்கைகளை கைவிடு” உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொம்மிடி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் எந்தவித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெற தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்ட பொம்மிடி உதவி காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.இறுதியாக நகர கிளைச் செயலாளர் விவேகானந்தன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
