

ஜூன் 13:
பொம்மிடி பொது மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில், பொம்மிடி ரயில் நிலையம் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ஆசாம்கான் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் சங்கீதாஸ்ரீ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆர்ப்பாட்டத்தில், காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்படும் 56108 மற்றும் 56812 எண் கொண்ட ஈரோடு–ஜோலார்பேட்டை பயணிகள் ரயில்கள் தொடர்ந்து காலதாமதமாக இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த ரயில்களை லோக்கூரில் நீண்ட நேரம் நிறுத்துவதற்குப் பதிலாக, பொம்மிடி ரயில் நிலையத்தில் லூப் லைனில் நான்காவது நடைமேடை அமைத்து ரயில்களின் காலதாமதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.அதேபோல், காலை இயக்கப்படும் ஈரோடு–ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலை, மேட்டூர் ரயில் புறப்படும் நேரமான காலை 5 மணிக்கு இயக்கும் வகையில் நேர அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பொம்மிடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும், தொடர்ந்து நிறுத்தம் வழங்காமல் புறக்கணிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் பொதுமக்களை திரட்டி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், பயணிகள் நல சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், சேலம் ரயில்வே கோட்ட அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்து கண்டன உரையாற்றினார்.சங்கச் செயலாளர் ஜெபசிங், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை விளக்கி கண்டன உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் முனிரத்தினம், துணைச் செயலாளர் இளங்கோவன், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கௌரவ உறுப்பினர்களான நியூ டைம்ஸ் ரஃபீக், அருணாச்சலம், அய்யூப் கான், ரவிக்குமார் மற்றும் முருகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மேலும் ரிடோ தொண்டு நிறுவன நிறுவனர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
