Sat. Jun 13th, 2026

வாசிக்கவுண்டனூர், ஜூன் 1:தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி ஆணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வாசிக்கவுண்டனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி (K.K.80) வளாகம் முன்பு இன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தமிழக அரசு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திருந்தாலும், அதில் பயிர்கடன் மட்டும் முக்கியத்துவம் பெறுவதாகவும், பல்வேறு வகையான விவசாய கடன்கள் முழுமையாக சேர்க்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.குறிப்பாக, விவசாய பயிர்கடன், விவசாய நகைக்கடன் மற்றும் விவசாய கால்நடைக்கடன் ஆகிய அனைத்தையும் விவசாயக் கடன்களாக கருதி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தின் போது, “தள்ளுபடி செய்! தள்ளுபடி செய்! அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்!” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடன் சுமையிலிருந்து அவர்களை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும், விவசாயிகள் பலர் பயிர் சாகுபடிக்காக மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத் தேவைகளுக்காக நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை பெற்றிருப்பதால், அவற்றையும் விவசாயக் கடன்களாக அங்கீகரித்து தள்ளுபடி செய்வது மட்டுமே உண்மையான நிவாரணமாக அமையும் என்று தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கடன் தள்ளுபடி ஆணையில் உரிய திருத்தம் செய்து, அனைத்து வகை விவசாயக் கடன்களுக்கும் தள்ளுபடி வழங்க வேண்டும் என அவர்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தனர்.

ஆசிரியர்.

D. ராஜீவ் காந்தி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *