
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக நிழல் வழங்கி வந்த மரங்கள் சமீப காலமாக பெருமளவில் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.குறிப்பாக, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அல்லது வீட்டு மனை மற்றும் வணிகக் கட்டிடங்கள் அமைக்கும் பணிகளுக்காக சிலர் திட்டமிட்டு சாலை ஓர மரங்களை அகற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பல ஆண்டுகளாக பயணிகளுக்கு நிழல் தந்து, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருந்து வந்த மரங்கள் திடீரென காணாமல் போனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சில முக்கிய சாலை பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டதால், தற்போது கடும் வெயிலில் பயணிகள் அவதியடைந்து வருவதாகவும், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் அரசின் சொத்து. அவற்றை அகற்றுவதற்கு முறையான அரசு அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அவசியம். ஆனால் தற்போது பல இடங்களில் எந்த முன்னறிவிப்பும் இன்றி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் அதிகாரிகள் அலட்சியம் உள்ளதா? அல்லது சிலருக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.மேலும், மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் புதிதாக வீட்டு மனை பிரிப்பு பணிகள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சாலை ஓர மரங்கள் இடையூறாக இருந்ததால் அவை அகற்றப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடங்களை நேரில் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறி மரங்களை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனுமதி இன்றி மரங்களை அகற்றியிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், பல ஆண்டுகள் வளர்ந்த மரங்கள் ஒரே நேரத்தில் அகற்றப்படுவது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதனால் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் மழை குறைவு போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
