

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கரகதஹள்ளி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மாதந்தோறும் வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை அமைக்கப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையில் கரகதஹள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.பாலக்கோடு பகுதியில் இருந்து மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தும் உள்ளூர் வாகனங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தினாலும், முழு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், நடைமுறையில் முழு கட்டணமாக ரூ.90 வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விளக்கம் கேட்டால் அடிக்கடி வாகன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நடவடிக்கையை கண்டித்து டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், கார் உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒன்றிணைந்து கரகதஹள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.மேலும், உள்ளூர் வாகனங்களுக்கு பொருந்தும் சுங்கக் கட்டண விதிமுறைகள் குறித்து தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான விளக்கம் அளித்து, கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு சிறப்பு செய்தியாளர்.
வேலு
