

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் உள்வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையத்தின் மூலம் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பினை மேம்படுத்துதல், உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான திட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்படும் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை மேம்படுத்துதல் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், உயர் மட்ட மேம்பாலம் பகுதி தொடங்கும் இடம், கட்டமேடு, ஆஞ்சநேயர் கோயில், சிறிய சுரங்கப்பாதை அமைவிடம், அதிக விபத்துகள் நடக்கும் இரட்டைப் பாலம், எலிவேட்டட் காரிடாரின் முடிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி, கனரக வாகனங்கள் ஒரு வழியாகவும், இலகுரக வாகனங்கள் ஒரு வழியாகவும் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி செல்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அறியும் வகையில் தேவையான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், இப்பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதனை பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அறியும் வகையில், 50 மீட்டர் இடைவெளியில் Blinkers, Barry Guard with reflecting Stickers, Rumpled strips, Strips, ஆகியன அமைக்கவும், Cautionary Boards and Work in Progress பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தொப்பூர் கணவாய் பகுதி முதல் தொப்பூர் இரட்டை பாலம் வரை தேவையான அளவு தற்போதுள்ள Centre Median இடைவெளி அளவினை குறைத்து போக்குவரத்திற்காக சாலையினை அகலப்படுத்தி, இரண்டு வழித்தடங்களாக வாகனங்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, Cement Blocks, Crash Barrier ஆன தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து, தொப்பூர் சுங்கசாவடி அருகில் உள்ள திட்ட இயக்குநர் அலுவலகத்தில் தொப்பூர் மலை கணவாய் பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NHAI) ஆணையத்தின் மூலம் அமைக்கப்படும் உயர் மட்ட மேம்பாலம் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் நடைப்பெற்றது. இந்த ஆய்வின்போது, சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர் திரு.சீனிவாசலு, மாவட்ட வன அலுவலர் ராஜங்கம் இ.வ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் (தருமபுரி) திரு.சிவராமன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.சி.க.ஜெயதேவ்ராஜ், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பில்கான் நிறுவன பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆசிரியர்.
D. ராஜீவ் காந்தி
