
பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம்பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ரயில் பயணிகள் நலன் மற்றும் பொம்மிடி ரயில் நிலைய வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தங்கள் வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், மத்திய இரயில்வே இணை அமைச்சர் மாண்புமிகு சோமண்ணா, மத்திய இணையமைச்சர் மாண்புமிகு எல். முருகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து மனு வழங்க திட்டமிடப்பட்டது.
மேலும் வரும் 11.06.2026 வியாழக்கிழமை சேலம் கோட்ட ரயில்வே அலுவலகத்திற்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து, பொம்மிடி தொடர்பான கோரிக்கைகளின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கம் கேட்டு அறியவும் முடிவு செய்யப்பட்டது. ஈரோடு–ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து காலதாமதமாக இயக்கப்படுவதை கண்டித்தும், பொம்மிடி ரயில் நிலையத்தில் 4-வது நடைமேடை அமைக்க வலியுறுத்தியும், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் தொடர் காலதாமதத்தை கண்டித்தும், தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் கூடுதல் இரயில் நிறுத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்தும், வரும் 13.06.2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பொம்மிடி ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல், 15.06.2026 அன்று பெங்களூரு கோட்ட ரயில்வே அலுவலகத்திற்கு சென்று மைசூர்–கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பொம்மிடி நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும், பெங்களூருவில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலம் வரை விரைவு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது.சங்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த கூடுதல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் சங்கத் தலைவர் திரு. ஆசாம்கான், செயலாளர் திரு. ஜெபசிங், பொருளாளர் திரு. முனிரத்தினம், துணைத் தலைவர் திருமதி சங்கீதாஸ்ரீ, துணைச் செயலாளர்கள் திரு. இளங்கோவன் மற்றும் திரு. வெங்கடேஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆசிரியர்
D.ராஜீவ் காந்தி
