
தர்மபுரி அருகே உள்ள நார்த்தம்பட்டி ஊராட்சியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்று பொதுமக்களிடம் ஆதரவு கேட்டதற்கும், தேர்தலில் வெற்றி பெறச் செய்ததற்கும் நன்றியை தெரிவித்தார்.அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பா.ம.க வேட்பாளராக தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ., தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று அதியமான்கோட்டை, நார்த்தம்பட்டி, இலளிகம் மற்றும் மிட்டாரெட்டிஅள்ளி உள்ளிட்ட 4 ஊராட்சிகளில் வாக்காளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய பா.ம.க செயலாளர் அன்புகார்த்திக் தலைமை தாங்கினார். இதில் சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து, தேர்தலில் அளித்த பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும், மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.அப்போது பேசிய அவர், “தர்மபுரி தொகுதி மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை, கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தேவைகளை சட்டமன்றத்தில் வலியுறுத்தி நிறைவேற்ற பாடுபடுவேன்” என்று உறுதியளித்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன், பா.ம.க நிர்வாகிகள் சண்முகம், சாந்தமூர்த்தி, செந்தில், சஞ்சீவன், முருகசாமி, மனோகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் சௌமியா அன்புமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தர்மபுரி மாவட்ட செய்தியாளர் G.சக்திவேல்

